RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

பெத்ததாயி


                                                                 
   





அன்னக்கி பார்வதியம்மா சந்தை ஏவாரம் முடிஞ்சு இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்கு வந்துச்சு. நல்ல ஏவாரம் இருந்தாலும் முகத்துல சந்தோஷம் இல்ல. காரணம் தனது ரெண்டு மகன்கள் செந்திலுக்கும், குமாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, கொஞ்ச நாளிலேயே பொண்டாட்டிப் பேச்சைக் கேட்டுக்கிட்டு தனிக் குடித்தனம் போயிட்டாங்க.


     மாசா மாசம் ஆளுக்கு ஆயிரம் ஆயிரம் தர்றதா சொல்லி மதுரைக்குப் போனவங்க, பார்வதியம்மாவைப் பார்க்கக் கூட வரதே இல்ல.லிங்காவடி கிராமத்தையே மறந்துட்டாங்க. பால்காரன் ராசு மகன் கந்தன் படிக்க மதுரைக்குப் போயிட்டு வர்றப்ப, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் பணத்தக் கொடுத்துவிடுவாங்க. பார்வதியம்மா தன் மகள் அம்முவுக்கு வாங்கிய கல்யாணக் கடனை எப்படியாவது கட்டணுங்கற வைராக்கியத்துல, சந்தை ஏவாரத்த விடாம பார்த்துச்சு. என்ன ஏவாரம் பார்த்தாலும் பெத்த பிள்ளைகள் பக்கத்துல இல்லைங்கற வருத்தம் அது முகத்துல தெரிஞ்சுது. 'புருஷன் இல்லாட்டினாலும் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்துச்சு. ஆனா பிள்ளைங்க பெத்ததாய விட்டுட்டு போயிட்டாங்க' என்று அக்கம்பக்கத்துல பேச்சு. 

    பார்வதியம்மாவுக்கு ஒரே அண்ணன் பேரு பாண்டி. சத்திரப்பட்டில பெட்டிக்கடை வெச்சுருக்காரு. அவர் மட்டும் அப்பப்ப பார்த்துட்டு போவாரு. இதுவும் சத்திரப்பட்டி சந்தைக்கு போரப்ப அண்ணனைப் பார்த்துட்டு வரும். மத்தப்படி சின்னச் சின்ன வீட்டு வேலை பார்க்கறதெல்லாம் கந்தன்தான்.

     சத்திரப்பட்டியில அன்னக்கி சந்தை ஏவாரம் நல்லா இருந்துச்சு. ஏவாரிக கூவி கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க. காய்கறிகள் எல்லாம் பச்சை பசேர்னு இருந்துச்சு. பொம்பளைகளும், ஆம்பளைகளும் காய்கறி வாங்கறதுக்கு அலை மோதினாங்க. பார்வதியம்மாகிட்ட காய்கறி வாங்கறதுக்கு தனிக்கூட்டம் இருக்கும். மனசுல எத்தனை பிரச்னை இருந்தாலும் சந்தைக்கு வர்றவங்கக்கிட்ட அனுசரனையா நடந்துக்கும். 

     மழை பேஞ்சாத்தான் விவசாயிக்கு வாழ்க்கை. மழை பெய்யலைனாதான் சந்தை ஏவாரிக்கு வாழ்க்கை. மழைக்காலம் வந்தாலே ஏன்டா வந்துச்சுனு நெனப்பாங்க ஒவ்வொரு சந்தை ஏவாரியும். மழையில காய்கறி நனைஞ்சா விலையும் கொறஞ்சு போகும். மறுநா சீக்கிரம் அழுகிப்போகும். 'நல்ல வேளை இன்னிக்கு மழை வரல'னு சந்தை ஏவாரத்த முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா பார்வதியம்மா.

      ஒரு நா மதுரைக்கு காசு வாங்கப் போனான் கந்தன். மாசம் ஆயிரம் ரூவா கொடுத்த குமாரு, "அடுத்த தடவை ரெண்டாயிரமா சேர்த்து கொடுத்திடறன்னு அம்மாகிட்ட சொல்லுரு'னான். செந்தில் கொடுத்த ஆயிரத்த மட்டும் வாங்கி வந்து பார்வதியம்மாகிட்ட கொடுத்தான் கந்தன்.

       இந்த மாசம் எப்படி வட்டிக் கட்டறதுனு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப வெளில யாரோ கதவைத் தட்டினாங்க. வந்தவரு, "சத்திரப்பட்டிகிட்ட ஆக்சிடண்ட் ஆயி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில உங்கண்ணனை சேர்த்திருக்காங்க'னு சொன்னாரு. இதைக் கேட்டதும் பார்வதியம்மாவுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

     ஆஸ்பத்திரியில போயி பாண்டி சம்சாரம் சரச பார்த்தவுடன், 'அத்தாச்சி...' என்று அழுதுக்கிட்டே கட்டிப்பிடிச்சா பார்வதியம்மா. "பார்வதி உங்க அண்ணனை போயி பாருடி"னு சரசு சொல்ல ஒத்தல் காலு இல்லாம கிடந்த பாண்டிய பாத்து துடிதுடிச்சு போனா பார்வதியம்மா.

      அண்ணனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டியதாயிடுச்சு. ஒரு வழியா சோகத்துல இருந்து மீண்டு ஏவாரத்தை தொடங்கினா பார்வதியம்மா.

         வட்டி ஒழுங்கா கட்டலைன்னு வட்டிக்கடைக்காரன் வீட்டு வாசலுக்கே வர, 'இன்னும் ஒரு வாரத்துல கட்டறன்னு' பார்வதியம்மா சொல்லுச்சு. வந்தவங்க போனாங்க எப்படா அடுத்த வாரம் வரும்முனு. தீபாவளி பண்டிகையினால வெள்ளிக்கிழமை வெக்க வேண்டிய சந்தைய லிங்காவடியில வியாழக்கிழமையே வெச்சாங்க.

       அசலூரு ஏவாரிங்க வர மாட்டாங்கறதால இருக்கற மூவாயிரத்துக்கும் காய்கறி வாங்கிப் போட்டுச்சு. இன்னிக்கு ஏவாரத்துல சம்பாரிச்சு வட்டிக் கட்டணும்னு நெனச்சு, கந்தனையும் தொணைக்கு கூப்பிட்டுச்சு பார்வதியம்மா. தீபாவளி ஏவாரம்ங்கறதால, ஜனங்க எல்லோரும் சீக்கிரமா வர ஆரம்பிச்சாங்க. 

         திடீருனு, சூரியன் மேகங்கிட்ட சரணடைஞ்ச மாதிரி, வானத்துல இருந்து ஒரு சொட்டு மழைநீரு பார்வதியம்மாவின் முகத்துல வேர்வையோடு வேர்வையா கலந்துருச்சு.

          மழை சட சடனு ஆரம்பிக்க பார்வதியம்மாவும், கந்தனும் படுதாவ காய்கறி மேல மூடினாங்க. ஜனங்க எல்லாரும் ஓடி ஒழிய ஏவாரிங்க என்ன செய்யறதுனு தெரியாம தத்தளிச்சாங்க. மழை எப்படியும் நிக்கும்னு ஏக்கத்துடன் பார்வதியம்மாவும், கந்தனும் சந்தைய விட்டு நகராம இருந்தாங்க. சந்தை, தாழ்வான இடத்துல நடக்கறதால மழைத் தண்ணி குட்டைப் போல தேங்கிடுச்சு.

      மழை இனி நிக்காதுனு தோண பார்வதியம்மாவும், கந்தனும் அரை மனசோட காய்கறிகளோடு வீட்டுக்கு போனாங்க. அடுத்த நாளே, தக்காளியும், வெங்காயமும் அழுகிப் போனதால, பார்வதியம்மா மனசு நொந்து போச்சு. அன்னையில இருந்து சரியா சாப்பிடலை, தூங்கலை. கடங்காரங்க தொல்லை ஒரு பக்கம்னா; பிள்ளைகளை பார்க்க முடியலையேங்கற ஆதங்கம் ஒரு பக்கம். அண்ணன் கால் ஒடஞ்சு கிடக்கற கவலை ஒரு பக்கம்.

       பார்வதியம்மாவுக்கு கந்தனோட கருனை மட்டும்தான் ஆறுதல தந்துச்சு. பால்கார ராசு வீட்டில எல்லாரும் பழனிமுருகனுக்கு மாலை போடறது வழக்கம். இந்த முறையும் போட்டாங்க, கந்தனும் போட்டான். கந்தன், பார்வதியம்மாவுக்கு அப்பப்ப வீட்டுலயிருந்து சாப்பாடு கொண்டாந்து கொடுப்பான். அவுங்க அம்மா சத்தம் போட்டாலும் காதுல வாங்கிக்க மாட்டான்.

      ஒரு நா, 'பெத்த பிள்ளைகளைப் பார்க்கணும் போல இருக்கு, போனப் போட்டு வரச் சொல்லுடா'னு பார்வதியம்மா சொல்ல, கந்தனும் எல்லாத்துக்கும் போனப் போட்டு கூப்பிட்டான். 

       திடீருனு, 'ஒரு வா பால் குடிக்கணும் போல இருக்கு கந்தா. வாங்கிட்டு வர்றியா?'னு பார்வதியம்மா கேட்டுச்சு. அது எப்பவும் அப்படி வாய் விட்டு கேட்டதே இல்லை. அவசரமா வீட்டுக்கு போயி அவங்க அப்பா ஏவாரம் பார்த்துட்டு மிச்ச வெச்ச பாலை, வீட்டுலயே காய்ச்சு கொண்டாந்தான்.

      குடும்பத்தோட சேர்ந்து எடுத்த போட்டாவ கையில வெச்சு, பார்வதியம்மா வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்துச்சு. கந்தன் வந்ததைக் கூட அது கவனிக்கலை. பிள்ளைகளை பார்க்கலைனு மனசுக்குள்ள அவ்வளவு ஏக்கம் போலிருக்குனு நினைத்த்துக் கொண்டு, "அம்மா, போட்டோவ பார்த்தது போதும். பால் ஆறிடப் போவுது. குடிங்க'னு சொம்பை நீட்டினான். பார்வதியம்மாகிட்ட எந்த சலனமும் இல்லை. ஜடம் போல கிடந்துச்சு.

          கந்தனுக்கு விஷயம் புரிய, மறுபடியும் போன் போட்டான் குமாருக்கு. 
 'எல்லாரும் சேர்ந்து வர்றோம் கந்தா. அம்மாகிட்ட சொல்லிரு'னு சொன்னான் குமார். 

    ' தேவையில்லை ணே. இனி அம்மாவுக்கு எது சொன்னாலும் கேக்காது. அம்மா நம்மள விட்டுட்டுப் போயிடுச்சு. வேமா வாங்கண்ணே.' என கந்தன் சொல்ல, கதறி அழுதபடி, குடும்பத்துடன் ராவோடு ராவா ஓடியாந்தான் குமார்.
   
    பார்வதியம்மா தூங்கறது மாதிரியே இருந்துச்சு. அதை பார்த்து, 'அம்மா, நாங்க நல்லா இருக்கணும்னு தனியாப் போயி, உன்ன சாகடிச்சிட்டோமே'னு குமாரும், செந்திலும் வாய் விட்டு அழுதாங்க.

    'பாசமா வளர்த்தியே..இப்படி பாடையில போயிட்டியே'னு பார்வதியம்மா மகள் அம்மு, ஒப்பாரி வெச்சு அழுதுக்கிட்டு இருந்தா.

   சேதி தெரிஞ்சு பாண்டியும், சரசும் ஆட்டோவுல அர்த்தராத்திரி வந்து சேர்ந்தாங்க. ஒத்தக் காலோடு கையில குச்சிய வச்சு நொண்டி அடிச்சுக்கிட்டு வந்து, தங்கச்சிய பார்த்து தேம்பி தேம்பி அழுதாரு பாண்டி.

   பார்வதியம்மா போயிட்ட விஷயம் காலையில எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. பால்கார ராசு, 'நாம சாமிக்கு மாலை போட்டிருக்கோம். கேத வீட்டுக்கெல்லாம் போகக் கூடாதுடா.'னு கந்தனிடம் செல்போனில் எச்சரிச்சான்.

'  மனுசன் செத்ததாளதான் சாமியே வந்துச்சு' னு சொல்லி மாலைய கழட்டிட்டான் கந்தன்.

பார்வதியம்மாவின் சடங்குல லிங்காவடி ஜனங்க எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. கரகாட்டம், தப்பாட்டம் ஒரு பக்கம், வாண வேடிக்கை ஒரு பக்கம்னு லிங்காவடி கிராமமே அதிர்ந்துச்சு.

   எறங்கு பொழுதுல பொணத்த தூக்கறதுதான் ஊரு வழக்கம். மணி மூணு ஆனதும் தூக்கினாங்க.

     குமார், செந்திலோடு சேர்ந்து கந்தனும் தூக்கினான்.

   ஊர்வலம் முடியற வரைக்கும் சரவெடிய சரசரமா வெடிச்சாங்க. லிங்காவடில நல்லதுக்கு கூட இப்படி யாரும் செலவு பண்ணியிருக்க மாட்டாங்க.

 பெத்ததாயிக்கு தலைமகன்தான் மொட்டை போடுவாங்க. ஆனா, பார்வதியம்மாவுக்கு குமார், செந்தில் மட்டும் இல்லாம, கந்தனும் மொட்டை போட்டது, ஊரு ஜனத்த ஆச்சரியப் பட வெச்சுது.


    'பெத்ததாயி மேல பிள்ளைகளுக்கு எவ்வளவு வாஞ்சையிருந்தா இவ்வளவு செலவு செஞ்சு தூக்கிப்போட்டுருப்பாங்க'னு ஒருவர் அங்கலாய்ப்பது கந்தன் காதுல விழுந்தது.

   'ஒலகத்துல பணமோ, பாசமோ மனுசன் உசுரோடு இருக்கற வரைதான. செத்தப் பிறவு செஞ்சு என்ன பிரயோசனம்'னு கந்தன் மனசுல நினைச்சது, குமாருக்கும், செந்திலுக்கும் காதுல விழுந்திருக்க வாய்ப்பில்லை.


தொடர் கதை 
.....................






ரங்கராஜன்  மாதிரி தெரிகிறதுஒரு நாள் தான் பாக்கல. முகமே மாறி போச்சு.ஏன் இப்படி  சோகமாக நடக்கிறார். அவருக்கு நேற்று என்ன நடந்ததோ?. கண்ணுல  வேற தண்ணீர் வருதேஎன்ன நடந்து வந்தவர்  திடீரென்று அந்த ரயில் தண்டாவாளத்தில் ஏன் தலையை வைக்கிறார். என்ன கஷ்டமோ? யாரோ ஒரு புண்ணியவான் ஒடியாரன். அட நம்ம சங்கரு. தூரத்தில் ரயில் வேற  வருதே .. சங்கர்  கூப்பிட கூப்பிட  வரமாட்டிங்கிறார். வயதான காலத்தில்  ரங்கராஜன்  ஏன் வீம்பு பண்றார். அவர் மேல் இரக்கப் பட்டு காக்கா கூட கரைகின்றது பாருங்கோ. பாவி மனுசா! அப்படி என்ன தலை போகிற காரியம் நடந்து போச்சு. பிரச்சினைக்கு மரணம் தான் தீர்வென்றால் எவனும் உசுரோட இருக்க முடியாதுனு தெரியாதா?. அய்யோ! ரயில் கிட்ட வந்துருச்சு.......... அப்ப ரங்கராஜன்  கதி? இதெல்லாம் என்னால பாக்க முடியாது.கண்ண மூடிட்டேன்நல்ல வேளை சங்கர்  காப்பத்திட்டான். அவரை  தரத்தரனு இழுத்ததில் பாவம் காலில் காயம் ஏற்பட்டுருச்சு. ரத்தம் பொழ பொழனு கொட்டுது. கர்சீப்ப கிழிச்சுக் கட்டுறான் சங்கர் . 'இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சினை'னு  கேக்குறான்.அதுக்கு பதில் சொல்றார்.'கை நீட்டி  அடிச்சிருந்தாக் கூட தாங்கியிருப்பேன். எம்மவன்  பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கைப் பாக்குறான். பசிக்குதுனு நானா போய் ரெண்டே ரெண்டு  இட்லிய எடுத்து தின்னேன் தம்பி. 'இதத் திங்கிறதுக்கு ரோட்டுல கெடக்கிறத திங்க வேண்டியதுதானே. பச்சைபிள்ளை ஒண்ணுயிருக்கு, அறிவில்லயா?'னு எம் மருமக கேட்டுப்புட்டா.இதுக்கு மேலயும் இந்த உசுரு இருந்தா என்ன? செத்தா என்ன?'  என்றவாறு  சங்கரிடம் பொலம்புகிறார். அவரு கதையை கேட்டு இவன் கண்ணுல தண்ணீர் வருகிறது. இவன் ஏன்  திடீர்னு ஓடுறான். இப்ப, தம்பி ..தம்பினு  ரங்கராஜன்  கூப்பிட, சங்கர் வேகமாக போறான்நிறுத்தியிருந்த பைக்க எடுத்துட்டான். வீட்டுக்கு தான் போகிறான் போல. என்ன வேகமாகப் போறான். காத்து பலமா அடிக்கிறது. மழை பெய்கிற மாதிரி தெரிகிறது.   ஆமா ! மழையே தான்.நனஞ்சுக்கிட்டே போறான். ஒரு வழியா வீட்டுக்குப் போயிட்டான். அவன்   வேகமா ஒடியாறதப் பாத்து மனைவி வனிதா பதறிட்டா.... என்னங்க என்னங்கனு கத்துறா, ஒரு நிமிடம் நின்றவன். வனிதாவின்   இரண்டு கன்னத்திலும் பளார் பளார்னு அறைகிறான். அவள்  கண்ணிலும் கண்ணீர். அப்படியே உள்ளே போகிறான். அவன் கண்கள் யாரையோ தேடுகிற மாதிரி தெரிகிறது. அந்த கடைசி அறைக்குப் போனதும் அப்படியே  நிக்கிறான். யாரோ படுத்துயிருக்காங்க. ! அவனுடைய  அப்பா கைலாசம்னு  நினைக்கிறேன். ஏன் பரிதாபமாக படுத்து இருக்கிறார். முகத்தில் உட்கார்ந்து போவது  தெரியாமல் கூட உறங்குகிறார்.
கிட்டப் போறான். அவனுடைய கை, அவரின் மூக்கு நோக்கி போகிறது. மூச்சு இருக்கானு பாக்குறான் போல .
தொடரும்.....


நல்ல சீன்ல முடுச்சுட்டாங்களே..
நேத்து ஒரு நா நாடகம் பார்க்கல. அதுக்கு இப்படி பொலம்ப விட்டுடாங்கே...
அடியே!சித்திரா. இந்த டிவி பொட்டிய கொஞ்சம்  அமத்துடி . பாவம். கைலாசம் போயிட்டாரோ ? இருக்காரோ ?

கதைக்களம் ராஜசேகர்.

காதல் வந்திருச்சு



நேர்முகத்தேர்வு காலை 10 மணிக்குத்தான். ஆனால் காலை 6 மணிக்கே  அவன் ஆஜார் ஆனான் .  இடைப்பட்ட நான்குமணிநேரத்தைஅருகில் உள்ள தேநீர்கடையில் செய்தித்தாள்கள் படித்தும், தேநீர் அருந்தியும், அங்கும் மிங்கும் நடந்தும் கொண்டும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை ரசித்து கொண்டும் நேரத்தைப் போக்கினான்.

 சென்னையில் கோடிஸ்வரர்கள் குடி இருந்தாலும் சாமனிய மனிதர்களும் வசிப்பதை உணர்ந்தான். வீடு இல்லாமல், தார்பாயைக்கூரையாக அமைத்து, உடுத்திய ஆடையை இறுக்கப் போர்த்திக்கொண்டு,  படுத்தவர்களைப் பார்த்து மனம் உருகினான். அதில் ஒரு முதியவர்  உடுத்திய ஆடை விலகி அசிங்கமாக இருந்ததை கண்டு சரி செய்தான்.  யாரோ அவள் ? அவனின் நடவடிக்கையை ஓராக் கண்ணால் பார்த்து விட்டுச் சென்றாள்.     

நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே  இருந்தது.  
அந்த நேரத்தில் அவள் வந்தாள். அழகான முகம், குள்ளமான ஆளு, அசட்டுச்சிரிப்பு, வெகுளித்தனமான பேச்சு … அந்தக் கூட்டத்தில் அவன் பார்வைக்கு,  தனியாகத் தெரிந்தாள்.
டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தேர்வானவர்களை உள்ளே அழைக்க, புற்றிலிருந்து ஈசல் வெளிப்பட்டதை போல் முந்திஅடித்துகொண்டு உள்ளே சென்றனர். அப்போது தான் தெரிந்தது நாட்டில் இருக்கும் வேலையின்மைப் பற்றி.

எப்படியாவது பேச வேண்டும் அவளுடன் பழக வேண்டும் அவனின் எண்ணங்கள் ஓட்டமிட்டது. தன் கையில் கட்டிருந்த வாட்சை அவிழ்த்து சட்டைப்பையில் மறைத்து கேட்டான், ‘என்னங்க மணி எத்தனை’?

கேட்டவுடன் இவனின் இதயத் துடிப்பு, கடிகாரத்தில் இருக்கும் நொடி முள்ளை விட பன்மடங்கு வேகம் காட்டியது.
அவள் பதில் சொன்னாள்.

‘மணி 10 ஆச்சு உள்ள வாங்கனு அழைச்சாங்களே கேட்கல?’ என்றாள்.

‘இல்ல நா கவனிக்கல’ என்றான்.

அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்,
‘உங்க பேரு’ என்று பேச ஆரம்பித்து  இறுதியில் முடிந்தது அவள் வீட்டு முற்றுச் சுவர் வரை.

 ‘நீங்க நல்ல பேசுறீங்க’ என்றாள்.

‘நீங்களும் தான்’ என்றான் .

‘நமது பழக்கம் இதோடு போக்கூடாது மறக்காம உங்க கல்யாணத்துக்குக் கூப்பிடனும்’ என்று சிரித்துகொண்டே  சொன்னாள்.

அவன் இதயத்தில் பறந்த பட்டாம்பூச்சிகள் அவள் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்தது.
என்ன சொல்லவதென்று அறியாமல் பேயடித்தது போல நின்றான்.

‘என்னங்க நா எதுவும் தப்பா சொல்லிட்டேனா?’ என்றாள்.

இல்ல ….இல்ல…… என்று சொல்லி அவனின் நா நடித்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பழைய நிலையை அடைந்தான்.

‘உங்க செல் நம்பர் கிடைக்குமா’ என்றான்.

‘எதுக்கு’ என்று ஒரு முறைப்புடன் கேட்டாள்.

‘கல்யாணம் வச்சா உங்களுக்கு சொல்லனும்ல அதான்.

கல்யாணத்துக்கு வருவீங்களா?’

கோபமாக இருந்த அவளின் முகத்தில் சந்தோஷம் சங்கமித்தது.

‘நிச்சயம் வருவேன். கல்யாண மண்டபத்தில பஸ்ட் ரோவுல பஸ்ட் சேர்  எனக்குத்தான்.  இன்டர்வியு நல்ல பண்ணுங்க ஆல் தி பெஸ்ட் ’என்று கூறி புன்னகை பூத்தாள்.  

நேர்முகத்தேர்வு முடிந்தது. கலந்தாய்வுக்கு இன்னும் இரண்டு வாரங்கள். அப்போது தான் இனி அவளைப் பார்க்க முடியும். ஆதலால் அவளுக்காக கேட்டின் வெளியே காத்திருந்தான். எத்தனையோ பெண்கள் கடந்து சென்றும் அவள் மட்டும் வரல. ஒரு வேளை சீக்கிரம் இன்டர்வியூ முடிஞ்சு போயிட்டாளோ?  சரி இனிக்  கிளம்புவோம் ‘ என அரை மனசுடன் கிளம்பினான் .

ஊருக்கு வந்ததிலிருந்து  அவளைப்  பற்றிய நினைவலைகள் அவன் இதயத்தில் அவ்வப்போது மோதியது. 
ஆனால் அவளுக்கோ அவனைப் பற்றிய  நினைப்போ வேற எண்ணங்களோ தோன்றல. ஜாலியாகத் தன் தோட்டச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியும்,  செல்லமாய் நினைக்கும் நாயுடன் விளையாடிக்கொண்டும் பொழுதைப் போக்கினாள்.   

அச்சமயத்தில் பாரதி   தன் கல்யாணத்திற்கு, பத்திரிக்கை வைப்பதற்காக  அவள் வீட்டிற்கு  வந்திருந்தாள்.
பாரதி அவளின் அம்மாவைப் பார்த்து , ‘நீங்க அவசியம் கல்யாணத்திற்கு வரணும் அப்பாவையும் கூட்டிட்டு வந்திருங்க’ என்று அன்பு ததும்ப அழைத்தாள்.
‘கட்டாயம் குடும்பத்தோட வர்றேம்மா கல்யாண மண்டபத்தில மொதவரிசையிலிருந்து ஒங்கல்யாணத்தைப் பாப்போம் சரியா?’

பாரதியிடம்  அவள் அம்மா கூறிய இந்த வார்த்தைகள் அவளின் செவியில் சட்டென்று விழுந்தது. அந்த வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து நினைவுழந்தாள். அவன் நினைப்பில் ஆழ்ந்தாள்.
 ‘ போயிட்டு வர்றேண்டி  சிந்தனயெல்லாம்  வேற எங்கேயோ இருக்கு போல…. இவளுக்கும் கால காலத்தில கல்யாணத்தைப் பண்ணிவைங்கம்மா ‘ என்று  பாரதி தன் பங்குக்கு பற்றவைத்து சென்றாள்.    

 அன்று இரவே கவுன்சிலிங்காக சென்னை கிளம்பினாள். பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தாள்.  சில்லென்று வாடைக்காற்று அடித்தது. குளிர் தாங்காமல் அருகில் உள்ள குழந்தை அழ, ஜன்னலை அடைத்தாள்.  அவள் அந்தக் குழந்தையின் பஞ்சு போன்ற மிருதுவான பிஞ்சு விரல்களைத் தடவிப் பார்த்தாள். தூக்கி விளையாடினாள். கொஞ்சினாள், நெற்றியில் முத்தமிட்டாள். அழுகைச் சத்தம் குறைந்தது. குழந்தை சிரித்தது.  ‘இங்க பாரு ..பெத்த அம்மா எனக்கிட்ட இருக்க அழுகிறேன்  உன் கிட்ட சமத்த இருக்கிறானே! ‘ ……. என்று பேசிய அந்த குழந்தையின் அம்மா பேச்சில் ஒரு பொறாமை தெரிந்தது.  ‘ அவளும் பொம்பள தான, கொழந்தைப் பாசம் இருக்காத பின்னே ..‘ என்று  சகபயணியின் பேச்சு  வேற.  

  சென்னை வந்தவுடன் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தாள்.  வெகு நேரமாக அவளின்  விழிகள் அங்குமிங்கும் நோட்டமிட்டது.

‘காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’ என்ற பாடல் அருகில் உள்ள தேநீர் கடையில் ஒலித்துக்கொண்டிருக்க, அவன் அவள் முன் தோன்றினான்.

‘யாரையோ தேடுறீங்க போல’ என்று அவன் கேட்க
அவளிடமிருந்து, தென்றல் காற்றைப் போல வார்த்தைகள் மெல்ல வந்தன.

‘உங்களைத் தான்’…..

'எதுக்கு தேடுனீங்கனு தெரிஞ்சுக்கலமா? 

‘உங்க கல்யாணத்திற்கு என்னைக் கூப்டிருந்தீங்க. சாரி ….என்னால பஸ்ட் ரோவுல  உட்காந்து பார்க்க முடியாது அந்த நிலைமைல நா இருக்கேன் …..’

‘ஏன் என்னாச்சு…. ’  

‘ஏன்னா அன்னைக்கு உங்க பக்கத்தில்  மணப்பெண்ணா நா  உட்காரும் போது எப்படி பஸ்ட்ரோவில  உட்காந்து கல்யாணத்தைப்பார்க்க முடியும் ‘ என்று அவள் சொல்லி முடிக்க, 

 உடம்பு சிலிர்த்தது, கண்ணீல் ஆனந்தக் கண்ணீர் வர எங்கையோ பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் அவன் இதயத்தில் குடிஅமர்ந்தது.

பாவம் அந்த மான்







அது குற்றால நீர்வீழ்ச்சியோ இல்லை, அகத்தியர் நீர் வீழ்ச்சியோ சரியாகத் தெரியவில்லை பசுமையான மரங்களுக்கு மத்தியில், பாறையின் மேல் வெள்ளிக்கம்பியை உருக்கி ஊத்தினாற் போல கொட்டிக்கொண்டிருக்கிறது அருவி நீர்.

அந்த அருவிநீரில், கதிரவன் ஒளி பட, வட்டமாக வண்ணங்கள் பிரிந்து, நாங்கள் மொத்தம் ஏழு பேர் என்பதை நினைவுபடுத்தினாற் போல இருந்தது.  

மலைக்கு அடிவாரத்தில் பச்சைப் போர்வையை விரித்து வைத்தாற் போல நெற்பயிர்கள் காட்சித் தர,  மலைக்குப் போட்டியாக வயலின் வரப்பு ஓரத்தில் ஓங்கி உயர்ந்த பனைமரங்ளும் நிற்கிறது.

பங்குனி மாதம் என்று நினைக்கிறேன் உச்சி வெயிலில் வானம் வெள்ளையடித்தாற் போல பளிச் சென்று இருக்க, வானத்தைக் கண்டு பொறாமைப்பட்ட காக்கைகள், அழுக்காக்க ஒன்று கூடிப் பறந்தன மேல் நோக்கி.

  அருவி நீர்  காட்டின் மேடு பள்ளங்களில் பாய்ந்து ஓடி நதியாகத் தன்னை வேடமிட்டுக்கொள்ள,   அந்த நதியின் கரையோரத்தில் ஒரு மானும் கன்றும் தாகத்தைத் தீர்ப்பதற்காக வர, நீண்ட நாள் பசியைப் போக்க, மானை நோக்கி பாயத் தயாராகிறது சிங்கம்.

அதிலிருந்து சற்றுத் தொலைவில் படகில் ஒரு வயதான முதியவர் இடுப்பில் வேட்டியைக் கட்டிக்கொண்டு, தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு பின்புறம் தண்ணீருக்குள் ஊர்ந்து வாயைப் பிளந்து கொண்டு வந்தது ஒரு முதலை.



இப்படி இயற்கைக்காட்சிகள்  நிறைந்த,   புனைந்த,  அழகான ஓவியத்தை, அமுதன் தன் வீட்டுச் சுவரில் மாட்டுவதற்காக ஆணி அடித்துக்கொண்டு இருந்தான். 
 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy